மஞ்சு விரட்டு (பொங்கல் வீர விளையாட்டு???)
காட்டில் வாழ்ந்திருந்து கல்லையே ஆயுதமாக்கி
விலங்கை வேட்டையாடினான் கற்கால
மனிதன்
நாடென்று வந்த பின்பு நன்மை தரும் விலங்குகளை
நன்றாகப் பழக்கி விட்டு அடக்கிப் பயன் பெற்றான்
பசு உண்டு பால் கொடுக்க, அசுவமுண்டு வண்டியோட்ட
காளையுண்டு நிலத்தை உழ, கழுதையுண்டு பொதி சுமக்க
யானை உண்டு சுமை தூக்க அரச குடும்பம் அமர்ந்து போக
போருக்குச் செல்ல குதிரைப்படை, யானைப்படை
விலங்குகளை அடக்கி வைக்க அவசியமுண்டு அந் நாளில்
அடக்குவதே வீரமென்று அறிவுறுத்திய காலமது
காளையை அடக்கினால் பொன்னும்,
பெண்ணும்
பெண் மேற் காதலால் அடக்க வந்த காளையர் பலர்
இன்றோ விஞ்ஞானத்தின் இமாலய வளர்ச்சி
இயந்திரங்கள் வந்தன விலங்கை விலக்கி
வயலை உழ ட்ராக்டரும் மோட்டோரும்
வண்டி இழுக்க பெட்ரோலும் டீசலும்
வீரக்காளையை விலங்கிட்டு வளர்த்து
கொம்பை மழித்துக் குப்பி
போட்டு விட்டு
கூட்டமாய் மக்கள் வேடிக்கை பார்க்க
அடக்க ஓடுவது அது என்ன வீரம்?
அடி பட்டால் துடிதுடிப்பது
உன் மாதாவும் மனைவியும்
உயிர் பிரிந்தால் அநாதையாவது
உன் பத்தினியும், குழந்தையும்
நாட்டு மக்கள் நலமாய் இருந்திட
வீடு துறந்து, தம் மக்கள் மறந்து
காட்டிலும், மேட்டிலும், மழை, பனியிலும்
நாடோடியாய்த் திரியும் ராணுவ வீரர்கள்
எதிரிகள் வராமல் எல்லையைக் காத்து
என்றும் சாவை எதிநோக்கி வாழ்ந்திடும்
உணவும், உறக்கமும், ஓய்வும் மறந்திடும்
உன்னதத் தியாகிகள் (அவரே) சுத்த வீரர்கள்
உயிர் உனக்குத் துச்சமென்றால்
தியாகம் செய்யத் தயாரென்றால்
வீரத்தை வெளிக்காட்ட வேட்கையென்றால்
எல்லைக்கு ஓடு, ராணுவ வீரனாய்!
புஷ்பா விஸ்வநாதன் .
அழகுத் தமிழில் அருமையான கவிதை!
ReplyDelete